wfs
- சிறுகதைத்தொகுப்பு

விமர்சனங்கள் - 05

 

கதைத்துவமும் கலைத்துவமும் கைகோர்க்கும் அபூர்வம்           
    

புலம்பெயர்ந்தோர் தமிழ் இலக்கியமானது உந்நதமான வகிபாகமொன்றினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. பல காரணிகள் இதற்கு உந்து சக்தியாக அமைந்துள்ளன. கற்பனையிலும் பார்க்க யதார்த்தமாக இலக்கியப் படைப்புகள் அமைந்து விடுவது இதில் முக்கியமானது.. நெஞ்சையழுத்தும் பாரங்களும் வெப்பிசாரங்களும் மரணபயங்களும் குண்டு வீச்சுகளும் புலம்பெயர்வுகளும் நிறைவேறாமலாகும் கனவுகளும் குழிதோண்டிப் புதைக்கப்படும் எதிர்காலங்களும் என்று அந்தப் படைப்புகளின் பேசுபொருட்கள் உயிரோட்டமானவை. இதனால் புனைவு இலக்கியங்கள் குறிப்பாக சிறுகதை வடிவம் புலம்பெயர்;தோர் தமிழ் இலக்கியப் படைப்புகளில் முதன்மை பெற்றவையாக விளங்கி வருகின்றன. அதற்கென

வீச்சுமிக்க புதிய எல்லைகள் வரையப்படுகின்றன. அதன் முகப்பு சர்வதேசத்தை நோக்கியுள்ளது.

நான்கு தலைமுறைகாலமாக சளைக்காது எழுத்தூழியத்தில் ஈடுபட்டு தற்போது அவுஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்து வாழும் எஸ்.பொன்னுத்துரை அவர்கள் இந்திராபார்த்தசாரதி அவர்களையும் இணைத்துக் கொண்டு 1994இல் வெளியிட்ட 'பனியும் பனையும்' என்ற  சிறுகதைத் தொகுதிதான் முதன்முதலாக புலம்பெயர்ந்தோர் இலக்கியமாக அடையாளம் காணப்பட்டது. இதுபோலும் பணிகளினால் படைப்பிலக்கியம் ஈழத்தவர்களால் தலைமை தாங்கப்படுமென்ற கோசம் பயிலப்பட்டது.. தற்போது இதனை வலுவூட்டும்வகையில் அகில் அவர்களின் 'கூடுகள் சிதைந்தபோது' என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது .

அகில் எனவே அறியப்படும் அகிலேஸ்வரன் அவர்கள் இலங்கை யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1991இல் புலம் பெயர்ந்து இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சில காலம் வாழ்ந்து தற்போது கனடாவில் வசிப்பவர். ஆன்மீகத் துறையில் ஈடுபட்டு 'நமது விரதங்களும்  பலன்களும்' 'இந்துமதம் மறைபொருள் தத்துவ விளக்கம்' ஆகிய  நூல்களை  எழுதியவர்.பின்னர் புனைவு இலக்கியத்தைத் தேர்ந்தவர். கட்டுரை, கவிதை, சிறுகதை, நாவல், நூல்ஆய்வு ஆகிய பணிகளில் ஈடுபாடு கொண்டவர். இவரது ஆக்கங்கள் இலங்கை, இந்தியா மற்றும் புலம்பெயர் நாடுகளில் வெளியாகும் பத்திரிகை, சஞ்சிகைகளிலும் சில இணையத் தளங்களிலும் வெளியாகியுள்ளன. 'திசை மாறிய தென்றல்' 'கண்ணின்மணி நீயெனக்கு' ஆகிய இரு நாவல்களையும் 'மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு' என்ற குறுநாவலையும் வெளியிட்டவர். 'கூடுகள் சிதைந்தபோது' என்ற இச்சிறுகதைத் தொகுதிக்காக பல தரப்பினரிடமிருந்து பரிசுகளும் பாராட்டுக்களும் பெற்றவர்.ஊடகவியலாளராகவும் புனைகதையாளராகவும் நன்கு அறியப்பட்ட அகில் அவர்கள் தற்போது WWW.TAMILAUTHORS.COM என்ற இணையத்தளத்தினூடாக மேலெழுந்து தமிழ் இலக்கிய உலகினருடன் தொடர்ந்தும் தொடர்பிலிருப்பவர்.
இத்தொகுதியில் மொத்தம் பதினான்கு கதைகள் அடக்கம். அவை வாழ்வின் யதார்த்தங்களைத் துல்லிமாகப் படம் பிடிப்பன. அனைத்துக் கதைகளும் ஏதோவொருவகையில் சமூக முக்கியத்துவ மையத்தை நோக்கியவை. போரியல் வடு, சாதிய எதிர்ப்புணர்வு. உயிர்களின் சமத்துவம், செல்வாக்கிழந்துவரும் முதுமை, குடும்ப வாழ்வின் சூட்சுமம் போன்ற கருத்தாடல்களினூடாக கதைகள் நகர்த்தப்படுகின்றன. புலம்பெயர் வாழ்வின் ஊடான பண்பாட்டு மாற்றமொன்றின் முகையவிழ்ப்பும் கதைகள் சிலவற்றின் தொனியாக உள்ளன.                                                                        
தொகுதியில் உள்ள கதைகளில் 'வலி' வாலாயமான போக்கிலிருந்து வேறுபட்டது. இதன் தளமும் தமிழுக்குப் புதிது. புலம்பெயர்ந்தபோது அனுபவித்த சித்திரவதைகள் மற்றும் உயிர்களின் சமத்துவம், அபுலால் உணவுமுறை என்று பன்மைத்துவக் கருத்துப் பாய்ச்சலாக இக்கதை அமைந்துள்ளது.
'கூடுகள் சிதைந்தபோது'  'கண்ணீர் அஞ்சலி'  'பெரிய கல்வீடு' ஆகியன போர்க்கால ஆக்கினைகளையும் அழிச்சாட்டியங்களையும் வௌ;வேறு தளங்களில்நின்று விளக்கும் கதைகள். மூன்றும் மூன்று வகைத்து. 'கூடுகள் சிதைந்தபோது'  தலைப்புக்கதை. ஒரு பறவையின் இறப்பில் அதன் இணையன் அடையும் தவிப்பை போர்க்கால புலம்பெயர்வின்போது தனது இளம் மனைவியை இழந்த துயரத்தோடு மீட்டிப் பார்க்கும் கதை. இக்கதையில் கதைத்துவமும் கலைத்துவமும் கைகோர்த்துச் செல்கின்றன..இவ்வாறே யுத்தத்தின் கோரமுகத்தை 'கண்ணீர் அஞ்சலி' என்ற கதை படம் பிடிக்கின்றது. தனது நாடு, தனது மண், தனது மக்கள் என்று மனித நேசிப்புகளோடு வாழ்ந்து புலம்பெயர மறுத்த ஒரு டாக்டருக்கு  மனைவியையும் ஒரேயொரு மகனையும் காப்பாற்ற முடியாத அவலம் கதையின் கருவாகின்றது. ஆபத்தில் உதவ முன்வராத குடும்ப உறவுமுறையை தூக்கி வீசுகின்றது 'பெரிய கல்வீடு' என்ற கதை. படைப்பாளனின் கதை சொல்லும் உத்தி இக்கதைகளுக்குக் கனதி சேர்க்கிறது.
'அம்மா எங்கே போகிறாய் ?' , 'இது இவர்களின் காலம்' , 'ஓர் இதயத்திலே'  'உறுத்தல்' ஆகியன புலம்பெயர் நாடுகளில் ஏற்பட்டுவரும் பண்பாட்டு மாற்றத்தைச் சொல்லும் கதைகள். உழைப்பையும் பண்பாட்டையும் கட்டிப் பிடித்துக் கொண்டு சீவியம் நடத்திய காலம்போய் இன்று அந்த வாழ்க்கையை புலம்பெயர் நாடுகளில் தொலைத்துவிட்டு அதன் பிரதிபலிப்புப் பிரதியீடுகளான மனப்போராட்டங்களையும் சவால்களையும் ஏற்று அவதியுறும் வாழ்வை  அடையாளம் காட்டும் கதைகள் இவை. புலம்பெயர்ந்த பின்னர் புதிய சூழ்நிலையில் இரண்டறக் கலந்து வாழ முயற்சிக்காமல் இன்னமும் பண்பாட்டுத் திமிரோடு வாழுதல் அவசியமா? என்ற கேள்வியை இக்கதைகள் பிரேரிக்கின்றன.
காலாவதியாகாமல் இன்னமும் புனைவுகளில் ஆதிக்கம் செலுத்தும் உள்ளடக்கங்களில்  சாதித்துவமும் ஒன்று. 'பெரிய கல்வீடு'  'வெளியில் எல்லாம் பேசலாம்' ஆகிய இரண்டு கதைகளில் இந்த விடயப் பொருள் எடுத்தாளப்பட்டுள்ளது. 'வெளியில் எல்லாம் பேசலாம்' என்ற கதையில்; 'சாதியென்றால் என்னவென்று கேள்விகேட்கும் புலம்பெயர்ந்தோரின் பி;ள்ளைகள்' என்று சொன்னதன்மூலம் சாதி வேறுபாட்டின் எதிர்கால இருப்பை கதைசொல்லி கேள்விக்கு உட்படுத்தியுள்ளார். மேலும் யுத்தப் பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்களில் புலம் பெயர்வு காரணமாக பல வீடுகள் அரைகுறைப் பாதிப்புக்களுடன் ஆட்கள் எவருமின்றிக் காணப்படுகின்றன. இவ்வாறான ஒரு வீட்டை மையமாக வைத்து 'பெரிய கல்வீடு' கதை பின்னப்படுகின்றது. இந்த வீட்டோடு உதவியாகவும் தொடர்பாகவுமிருந்த வேற்றுச் சாதிக் குடும்பமொன்று வேறுவழியில்லாமல் இந்த வீட்டைப் பயன்படுத்த முனைந்தபொழுது சாதியைக் காட்டி அதனைக் கையகப்படுத்த முனையும் உறவுகாரர்களைப் புறந்தள்ளி சாதிவேறுபாடு பாராமல் உதவி செய்தவர்களுக்கு சாதகமாகக் கதையை முடித்தமை இக்கதைக்குச் சிறப்புச் சேர்க்கின்றது. யுத்தகால விதைப்புகளின் அறுவடைதான் இதுபோன்ற   பெரிய கல்வீடுகள்.அவை இன்று ஆளில்லாமல் வெறுச்சோடிக் கிடக்கன்றன. இப்பிரச்சினைக்கு இக்கதை ஒரு தீர்வை முன்வைத்துள்ளது. அதன்மூலம் புலம்பெயர் இலக்கியத்தின் படைப்பு உபாயங்கள் வெறுமனே இரைமீட்டல்களாக மாத்திரம் நின்றுவிடாமல் நிகழ்காலப் பிரச்சினைக்கான எதிர்வினைகள் படைப்புகளினூடாகக் கொண்டுவரப்படவேண்டும் என்பதை இக்கதையின்மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
கணவன் மனைவி உறவின் மகோன்னத தரிசிப்பு 'ரேடியோப் பெட்டி' கதை. எனின் குடும்ப வாழ்வின் முரண் தோற்றத்தின் விளைவு 'தேடல்'என்ற கதை.. 'பதவி உயர்வு' என்ற கதை இனவிரோத மனப்பான்மையிலும் மானிடஉறவு மேதமையானது என நிறுவுகின்றது.  . யதார்த்த வாழ்வின் எல்லைகளை கைநீட்டிக் காட்டும் இக்கதைகள், சொல்லும் பாங்கினால் ஈர்ப்புப் பெறுகின்றன.
உருவம், உள்ளடக்கம், உத்தி என்பன மாத்திரம் ஒரு சிறுகதையின் மேன்மைக்குப் போதுமானதல்ல. படைப்பு மொழியும் பார்த்திர வார்ப்பும் சமமான பங்களிப்பினை வழங்க வல்லன. யதார்த்த வாழ்வின் பிரதிபலிப்புகள் இயல்பான மொழிப் பிரயோகத்தினால் மனித உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தி சாதிக்கவல்லவை என்பதை இத் தொகுதிக் கதைகள் நிறுவுகின்றன. 'கூடுகள் சிதைந்தபோது' கதை இதற்கான ஒரு பதச் சோறு எனலாம்.
உயிர்ப்புள்ள பாத்திரங்களும்  இத்தொகுதிக்குப் போசணை வழங்கியுள்ளன. விசாலாட்சி (அம்மா எங்கே போகிறாய்? ) , தங்கம் (பெரிய கல்வீடு) , கௌரி மற்றும் தீபா ( இது இவர்களின் காலம்) போன்ற பாத்திரங்களின் வாயிலாக அழியாத சோகங்களையும் விடுபட முடியாத ஏக்கங்களையும் பண்பாட்டுப் பெருமையினையும் எதிர்காலக் கனவுகளையும் விம்மலையம் பொருமலையும் நம்மால் அனுபவிக்க முடிகின்றது.  துயர வாழ்வின் இந்த அனுபவிப்புக்களை கதைகளின் வழியாக கலாநேர்த்தியோடு படைப்பாக்கிப் பகிர்ந்தளித்துள்ளார் அகில் அவர்கள்.
சிறுகதையுலகம்பற்றிய அவரின் புதிய எண்ணங்களினாலும் அதுதொடர்பிலான எத்தனங்களினாலும் புதிய தளங்களை அறிமுகம் செய்யும் பாங்கினாலும் சூழலில் இருந்து பெற்றுக் கொண்ட அனுபவங்களினாலும் சமூக முக்கியத்துவம் நோக்கிய தேடலாலும் வகைக்கொன்றும் வண்ணத்துக்கொன்றுமான வெளிப்பாடுகளாலும் உயிர்ப்புமிக்க மொழிநடையாலும்  'தனது சிறுகதைகளுக்காக நட்சத்திர அந்தஸ்துகோரி ஒரு பயணத்தை' ஆரம்பித்து வைக்கிறது  'கூடுகள் சிதைந்தபோது' சிறுகதைத் தொகுதி.

நன்றி  'செங்கதிர்'  - டிசம்பர் 2012
 இரண்டாம் விசுவாமித்திரன்-இலங்கை                       
                  

 
நூலின் அட்டைப்படமும் அச்சும் மிக நேர்த்தியாக உள்ளது. வம்சி பதிப்பகத்திற்கு முதலில் பாராட்டுக்கள். நூல் ஆசிரியர் திரு அகில் www.tamilauthors.com என்ற இணையத்தின் மூலம் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட எழுத்தாளர்கள, கவிஞர்கள் பற்றிய குறிப்புகளை ஆவணப்படுத்தி உலகம் முழுவதும் இணைய வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவர்.

இந்நூலை முதுபெரும் ஈழத்து எழுத்தாளர், பேராசிரியர், கட்டுரையாளர் விமர்சகர் பன்முக ஆற்றலாளர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார். அவர் இறக்கும் தருவாயில் இறுதியாகத் தந்த முன்னுரை இடம்பெற்ற நூல் என்பதால் கூடுதல் சிறப்புப் பெறுகின்றது . அவருடைய முன்னுரையில் உள்ள வைர வரிகள் அகிலின் கூடுகள் சிதைந்தபோது எனும் சிறுகதையில் இந்த மொன்ராஜ் (montage) உத்தியின் இலக்கிய வடிவைக் காண்கிறேன்.

கலாநிதி க.குணராசா அவர்களின் அணிந்துரை அற்புதம். கலாநிதி நா. சுப்பிரமணியன் அணிந்துரை அழகுரை.

சாதாரண நகைச்சுவை துணுக்கை விரிவாக்கி சிறுகதை என்றும், ஆபாசத்தை விலாவாரியாக விளக்கி சிறுகதை என்றும் எழுதி வெளி வரும் சில சிறுகதைகளை படித்த விபத்தின் காரணமாக, எனக்கு சிறுகதை மீதே ஈடுபாடு இல்லாமல் இருந்தது. இந்த நூலை படித்து முடித்தவுடன் இது போன்ற சிறுகதைகளை நாமும் எழுத வேண்டும். என்ற உந்துதலைத் தந்து வெற்றிப் பெற்றது நூல் ஆசிரியரின் சிறுகதை உத்தி பாராட்டுக்குரிய
து. சிறுகதை எப்படி? எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் குறும் விதமாக கதைகள் உள்ளது .

14 கதைகளும் புலம் பெயர்ந்த வலியை, வேதனையை, உணர்வை வாழ்வியல் நெறியை, மனிதாபிமானத்தை, விலங்காபிமானத்தை உணர்த்துகின்றது. இந்நூலில் உள்ள பல கதைகள் உலக அளவிலான போட்டியில் பரிசுப் பெற்ற சிறுகதைகள். முத்திரைப் பதிக்கும் முத்திரைக் கதைகள்.

  ஈழத்தமிழர்கள் வலி மிகுந்த புலம் பெயர்ந்த வாழ்விலும் இதமிழுக்காக தமிழ் இலக்கியத்திற்காக ஆற்றிவரும் பணிகள் அளப்பரியது .உலக அளவில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக நம் தமிழுக்குத்தான் அதிக இணையம் உள்ளது . தமிழ் இணையங்களில் பெரும்பாலான இணையம் ஈழத்தமிழர்களால் தான் நிர்வகிக்கப் படுகின்றது . நூல் ஆசிரியர் திரு அகில் இனிய ஆசிரியராக இருந்துகொண்டே படைப்பாளியாகவும் வெற்றிப் பெற்று இருப்பது வியப்பைத் தருகின்றது .

வருமானத்தில் ஒரு பகுதியும் இபொன்னான நேரத்தையும் தமிழ் இலக்கியத்திற்காக செலவு செய்து தமிழை ஈழத்தமிழர்கள் வளர்த்து வருகின்றனர். புலம் பெயர்ந்தோரின் வலியை, வேதனையை, உள்ளத்து உணர்வை இதாய் மகன் பாசப் போராட்டத்தை கதைகளில் படம் பிடித்துக்காட்டி வெற்றி பெறுகின்றார்.
நூல் ஆசிரியர் திரு அகில். திரு அகில்அவர்களின் வாழ்க்கைத் துணையாக மட்டுமன்றி இலக்கியத் துணையாகவும் விளங்கி, உதவி வரும் அவரது மனைவிக்கும் பாராட்டுக்கள். அவரது ஒத்துழைப்பு இல்லை என்றால் இந்த நூல் வந்து இருக்க வாய்ப்பு இல்லை.  இந்நூலில் உள்ள கதைகளும் முழுவதும் கற்பனையே என்று சொல்லி விட முடியாது. திரு அகில் அவர்களின் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகள் அவரது உறவினர்கள் நண்பர்கள் வாழ்வில் நடந்து நிகழ்வுகளை அவதானித்து கதை வடித்துள்ளார்

வலி என்ற முதல் கதைய்லேயே முத்திரைப் பதிக்கின்றார். நூல் ஆசிரியர் திரு அகில்.புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் இன்னலை படம் பிடித்துக் காட்டுகின்றார் .பன்றிகளோடு பன்றியாகப் பயணித்த தமிழரின் அனுபவத்தை சுட்டி,இப்படி நடக்கும் என்று நினைத்து இருந்தால் செத்தாலும் பரவாயில்லை என்று சிலோனில் இருந்து இருக்கலாம். என்று ஒரு கணம் அவன் நினைத்துப் பார்க்கக் கூடத் தவறவில்லை. என்று எழுதுகின்றார்.

கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால் அங்கு ஒரு கொடுமை ஆடிக்கொண்டு வந்ததாம். என்ற பொன் மொழியை நினைவு படுத்துவதுப் போல. இலங்கையில் இனவெறி, வன்முறை தலை விரித்து ஆடுகின்றதே என்று உயிருக்குப் பயந்து புலம் பெயர்ந்தால், அங்கும் துன்பம் வருவதுக் கண்ட, புலம்பும் தமிழரின் உள்ளத்து உணர்வை மிக நுட்பமாக கதையில் பதிவு செய்துள்ளார் .
அசைவ விரும்பியான மயூரன் சைவமாக மாறியதன் மூலம் இந்தக் கதைப் படிக்கும் வாசகர்கள் அசைவ விரும்பியாக இருந்தால் சைவத்திற்கு மாறி விடுவார்கள். இன்று மருத்துவர்களும் உடல் நலத்திற்கு சைவ உணவையே பரிந்துரை செய்கின்றனர் .கதை நெகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு கதையும் படிக்கும் வாசகனுக்கு ஒரு செய்தி சொல்கின்றது .அதுதான் இந்த நூலின் தனிச் சிறப்பு.

வாடியப் பயிரைக் கண்டப் போதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வள்ளலாரைப் போல விலங்குகளின் மீது பாசத்தைப் பொழிந்து விலங்கு அபிமானத்தை வரவைத்து வெற்றிப் பெறுகின்றார். நூல் ஆசிரியர் திரு அகில் .தாய் மகன் பாசப் போராட்டத்த, முதியோர் இல்லத்தில் வாடும் முதியோரின் வருத்தத்தை காட்சிப் படுத்தி உள்ளார்.

இப்படி அனைத்து கதைகள் பற்றியும் எழுதிக் கொண்டே போகலாம். முழுவதும் எழுதி விட்டால் நூல் படிக்க சுவை குன்றும். என்பதால் இத்துடன் விடுகின்றேன், மற்றவை வெள்ளித் திரையில் காண்க! என்பதைப் போல மீதியை நூலைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள். ஈழத்தமிழர் உலகில் இல்லாத நாடு இல்லை ஈழத்தில் நடந்த இனவெறியின் காரணமாக உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து தமிழ் வளர்த்து வருகின்றனர். கூடுகள் சிதைந்தபோது என்ற நூல் படித்து முடித்தவுடன் என் நினைவிற்கு ஈழத்தமிழர்கள் தேன்கூடு போல வாழ்ந்து வந்தனர் .ஆனால் அந்தக் கூடு சிதைந்து விட்டது.


தேன்கூட்டில் கல் எரிந்து சிதைப்பதுப் போல சிதைத்து விட்டனர். ஈழத் தமிழர்களுக்காக,  ஈழத்தில் தனி நாடு அமைவதே ஒன்றே தீர்வாகும் .அப்போதுதான் புலம் பெயர்ந்த தமிழர்கள் பிறந்த, மண்ணான ஈழம் வந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும். படைப்பாளிகள் அனைவரும் இதற்காக உரக்க குரல் கொடுங்கள். என்ற சிந்தனையை என்னுள் விதைத்தது இந்த நூல் .இந்நூல படிக்கும் ஒவ்வொரு வாசகர் மனதிலும் தனி ஈழம் வேண்டும் என்ற சிந்தனையை விதைக்கின்றது. நூல் ஆசிரியருக்குப் பாராட்டுக்கள். இந்த நூலிற்காக பல பரிசுகளும் விருதுகளும் உறுதியாகக் கிடைக்கும் .

- கவிஞர்இரா.இரவி